Monday, January 29, 2007

ஒலியின் இருப்பு

இப்போதுதான் தெரிகிறது
உயிர்வாழ்ந்து கொண்டிருந்ததே
ஒலியினால்தான் என்று.
பேச்சுக்குரல்களும்
பாடல்களுமற்ற
மெளனம் எனக்குப் பழக்கமில்லை.
நடக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தைபோல
ஒலியற்ற தளத்தின்மேல்
விழுந்து எழுகிறேன்.
ஒலி என்பதே பார்வையாய் இருந்ததோ...
சுற்றிலும் கவிகிறது அந்தகாரம்.

பழகத்தான் வேண்டும்

பொம்மைகளைக் கையுதறிப் பிரிந்ததுபோல்
நெருக்கமானவர்கள் மரணவெளியுள்
இறங்கி மறையப் பார்த்திருந்ததுபோல்
மனிதர்களை நேசிப்பதை நிறுத்தியபிறகும்
உதட்டில் புன்னகையை
ஒட்டவைத்துக்கொண்டிருப்பதுபோல்
மெளனத்தையும் பழக்கப்படுத்தி விடலாம்.

ஆயினும்
மனதிற்குள் அதிரும் குரல்களையும்
என்னோடு நான் பேசுதலையும்
நிறுத்தும்வரை
அதன் பெயர்
மெளனமல்ல
பேசாதிருத்தல்.

1 comment:

Anonymous said...

இந்தப் பின்னூட்டம் வேலை செய்கிறதா என்று பார்க்கிறேன்.