Friday, February 2, 2007

மறதி நோய்

அரங்கேறிக்கொண்டிருக்கிறது
பூப்படைந்த ‘புனித’விழா…!

இன்றைய கதாநாயகி
புகைப்படக்கருவிக்குள் அழகாக சுருள்கிறாள்
ஒளிப்பேழைக்குள் பல கோணங்களில்
அடங்கும் நேர்த்திக்கும் குறைவில்லை.

மது பெருக்கெடுத்துப் பாய்கிறது
ஆண்களின் உற்சாக உளறலில்
களைகட்டுகிறது ‘சாமத்தியம்’

நகை, புடவை இன்னபிற
பார்த்துக் களைத்த பெண்களிடம்
உச்சஸ்தாயியில் அலறும் பாடல்
எடுத்துவருகிறது இறந்த காலத்தை
இளமையின் காதலை.

புகைப்படத்திற்காக புன்னகை உறைவித்து
காத்திருக்கிறது நீண்ட வரிசை.
பருவமடைந்ததைப் பறையறிவித்த தந்தை
புது வேட்டி தடுக்கத் தடுக்க
எப்படியோ விழாமல் தப்பித்துக்கொள்கிறார்.
‘கொடுத்தவர்கள் தந்தனரா…’
பெண்ணின் தாய்க்குள் ஓடுகிறது ஒரு கேள்வி.

குப்பைத்தொட்டியுள் இறைந்துகொண்டிருக்கிறது
விருந்துண்ட மிச்சம்.
எங்கோ மிகத் தொலைவில்
குண்டு சிதைக்காத வயிறுகள்
இன்னும் இருக்கின்றன பசியோடு