அன்பே!
துயரலைக்கும் விழிகளுடன் கையசைத்தாய்
உலர்ந்த கன்னங்களில் உருளும் கண்ணீருக்கு
வெட்கியபடி சொன்னது நினைவிருக்கிறது
'இந்த மரங்கள் இன்றைக்கும் அழகாயிருக்கின்றன'
தோழி!பிரியும் கணத்தின்
பொருளற்ற வார்த்தைகள்
நீ பேசியிருக்க வேண்டியதில்லையடி!
தேசத்தில் இருப்பழிந்து
எங்கோ இடைநடுவில்
முகவர்களின் வாக்குறுதிகளில்
எப்போதாவது உயிர்ப்பவளே!
நீ பேசியிருக்க வேண்டியதில்லை.
மொழியறியா நாடொன்றின்
விமானநிலையத்தில்
உனது நம்பிக்கைகள் தகர்ந்ததை
நேற்று தொலைபேசி சொன்னது.
'எங்களுக்கேன் இந்த நிலை?'என்றழுத
உந்தன் குரல்
இங்கொலித்துத் தேய்ந்தது.
சிறைகள்தான் வேறு
அன்பே!சிலுவைகள் ஒன்றுதான்!
இருந்திருக்கலாம் இங்கேயே...
குண்டுவீச்சு விமானங்கள்
வராத பொழுதுகளில்
பல்வேறு உருக்காட்டும் நீலவானம்
முற்றம் வந்திறங்கி
சின்ன அலகாலே சிறகுகோதும் சிட்டுக்குருவி
சம்பலும் மரவள்ளிக்கிழங்கும் என
சாவின் வலியும் வாழ்வின் சுவையும்
கூடிய ஊரொன்றில் வாழ்ந்திருக்கலாம்.
இல்லையெனில்...
சூழ்ந்தழச் சுற்றமில்லாமல் செத்திருக்கலாம்.
இங்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை
உனது அறையைவிடச் சற்றே விசாலமான
குளிர்ச்சிறையொன்றில் இருந்து சொல்கிறேன்
இங்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment